அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி டிவிஎச் குடியிருப்போர் நல சங்கத்தினர் முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது.
கோவை திருச்சி சாலையில் உள்ள டிவிஎச் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் வசதி, குப்பைகளை அகற்றுவது என அடிப்படை வசதிகளை சரி வர அடுக்குமாடி நிர்வாகம் செய்வதில்லை என குடியிருப்பில் வசித்து வருபவர்கள் முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தலைமை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தருவதாக அடுக்கு மாடி நிர்வாகம் உறுதியளித்த படி எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் இருப்பதாகவும்,850 குடியிருப்புகள் உடைய இந்த வளாகத்தில் குறிப்பாக குடிநீர் இணைப்பு வசதி செய்து தரப்படவில்லை எனவும் போர் வாட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது என்றனர்.
தற்போது உள்ள சில டவர்களில் ஒரு லிப்ட் மட்டுமே இயக்கப்படுவதாகவும் பராமரிப்பு செலவு என சதுர அடிக்கு 2 ரூபாய் + ஜி.எஸ்.டி என செலுத்த கட்டாயப்படுத்துவதாகவும் கூறினர்.
மேலும், நான்கரை கோடி ரூபாய்க்கு மேல் உள்ள கார்பஸ் பணத்தை வட்டியுடன் உடனடியாக திருப்பி தர வேண்டும் என்று கூறிய அவர்கள், அனைத்து வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர். குடியிருப்பு வாசிகள் தங்களது,
கோரிக்கைகளை முன் வைத்து அங்கு வந்த முதன்மை தலைமை அதிகாரி ஸ்ரீ தேவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்களிடம் பேசிய முதன்மை தலைமை அதிகாரி ஸ்ரீ தேவி, நிர்வாக தரப்புடன் பேசி அனைத்தும் பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். அதேபோல, 10 நாட்களில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் பராமரிப்பு கட்டணம் 2 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட மாட்டாது எனவும் உறுதியளித்தார்.
கோவை செய்தியாளர் பிரசன்னா