
முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி தனது 84 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும் அரசியல் கட்சியினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மூன்று பிரதமர்களுடன் பல்வேறு துறைகளின் அமைச்சராக பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி. மேலும் முதல் முறையாக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற போது அவருக்கு பதவி பிரமாணம் செய்து செய்து வைத்தவர் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதியமைச்சராக சிறப்பாக பணியாற்றிய பிரணாப் முகர்ஜி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பிரணாப் முகர்ஜி காலமானார். அவரது மறைவு மிகப்பெரிய சோகம் எனக் குறிப்பிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பிரணாப்முகர்ஜியின் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் ஏழு நாட்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது