தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (38). கூலித் தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அஜீத் (22), காலாங்கரையைச் சேர்ந்த முனீஷ் (23) ஆகியோருடன் சேர்ந்து நேற்று இரவு அங்குள்ள சுடுகாட்டுப்பகுதியில் வைத்து மது அருந்தி உள்ளார்.
அப்போது, முருகேசன் குடி போதையில் அஜீத்தின் தாயை அவதூறாக பேசியதால் அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து, முருகேசன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்த புதுக்கோட்டை போலீஸார் முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அஜீத் மற்றும் முனீஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கொலை நடந்த சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.