கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 149 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை ராஜாஜி சாலை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்திற்கு இன்று காலை இன்று தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் பல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.