அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டுகளுக்கும், அத்தாணி அருகே உள்ள கூத்தம்பூண்டி மற்றும் கருவல்வாடிப்புதூரில் இருந்து ஆற்று நீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கூத்தம்பூண்டியிலிருந்து பாலமுருகன் தியேட்டர் வழியாக கொண்டு செல்லும் ஆற்று நீர் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டது. குடிநீர் குழாய் உடைப்பிற்கு, ஏர்டெல் நிறுவனத்தின் மூலம் கேபிள் வயர்கள் பதிக்கப்பட்ட பணியின்போது போடப்பட்ட துளையே காரணம் என பேரூராட்சி நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதன் காரணமாக ஐந்து நாட்களாக, பேரூராட்சி பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் திண்டாடி வருகிறது.
இந்த நிலையில், குடிநீர் குழாய் உடைப்புக்கு காரணமான, ஏர்டெல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தியிடம் தேமுதிக நெசவாளர் அணி மாநில துணை செயலாளர் ராஜா சம்பத் புகார் மனு அளித்தார்.
அப்போது, நகர பொறுப்பாளர் ஜாகீர். கேப்டன் மன்ற மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா