ரெயில்வே துறையில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களுக்கு டிசம்பர் 15-ந் தேதி முதல் ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ரெயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான வினோத் குமார் யாதவ் நேற்று செய்தியாளர்களுக்கு காணொலி காட்சி வழியாக பேட்டி அளித்தார். அப்போது, ரெயில்வேயில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 640 பணி இடங்களை நிரப்புவதற்கு கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தேர்வு டிசம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கும் என்றும் கூறினார். இந்த தேர்வுக்காக 2 கோடியே 42 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி முடிந்து விட்டது. தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேர்வு தேதிகள் முழுமையாக விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வரும் 12-ந் தேதி முதல் 80 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் இவற்றுக்கான முன்பதிவு 10-ந் தேதி தொடங்க உள்ளது என்றும் கூறினார்.