ச.ராஜேஷ்
நாகப்பட்டினம்
*உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதாகோவில் பெரிய தேர்பவனியில், உலகமக்கள் நலம் பெற வேண்டி பிரார்த்தனை.*
உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு திருவிழா ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் எளிமையாக துவங்கியது. திருவிழாவில் வெளிமாநில மாவட்ட பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் நாள் தோறும் பேராலயத்தில் நடைபெற்று வந்த சிறப்பு திருப்பலி மற்றும் தேர்பவனி மிக எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் 10 நாள் திருவிழாவின் முக்கிய திருவிழாவான இன்று வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி நடைபெற்றது. பேராலயம் முன்பு பெரிய சப்பரத்தில் எழுந்தருளிய மாதா திருத்தேரினை தஞ்சை மறை மாவட்ட ஆயர், தேவதாஸ்அம்புரோஸ் புனிதம் செய்து தேர் பவனியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள் மாதா தேரினை சுமந்துவர தேரானது பேராலயத்தை சுற்றி வலம் வந்தது. அப்போது கூடியிருந்த கிறிஸ்தவர்கள் “ஆவே மரியா” “மரியே வாழ்க” என மாதாவை வேண்டிக்கொண்டனர். மாதா பிறந்த தினமான இன்று வேளாங்கண்ணி பேராலயத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் பாதிரியார்கள் தலைமையில் உலக மக்கள் நலம் பெற வேண்டி தமிழ் ஆங்கிலம் மலையாளம் கன்னடம் கொங்கணி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்று மாலை 7 மணி அளவில் கொடி இறக்கப்பட்டு வேளாங்கண்ணி பேராலய திருவிழா முடிவு பெறுகிறது.