கொரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை விளக்கி குமரி முதல் மெரினா வரை தொடர் பிரச்சார யாத்திரை நடைபெற்று வருகிறது.
கடந்த 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை திருநெல்வேலி தூத்துக்குடி ராமநாதபுரம் வழியாக இன்று புதுக்கோட்டை வந்தடைந்தது.
பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளரும் தமிழ்நாடு ஏகத்தூவ ஜமாதின் மாநில தலைவருமான இப்ராஹீம் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் வகையில் கடைவீதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
பின்னர் அவர் நகர்மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்.
திமுகவில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற தோழமைக் கட்சிகள் மற்றும் ஓடாத பட இயக்குனர்கள் சில நடிகர்களை வைத்து மத்திய அரசு மீது திமுக தொடர்ந்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை முறியடிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்த யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்களின் தற்கொலை தற்போது அதிகரித்து வருகிறது இதற்கு காரணம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான். நீட் தேர்வு குறித்து மாணவர்களிடம் பயத்தை உண்டாக்கியும் மற்றும் மக்கள் மனதில் பாஜக மீது வெறுப்பை தூண்டும் வகையில் திமுக தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மேலும் மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுகாவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்ப்பு தெரிவித்து வருவது வேதனை அளிக்கிறது,
அதேபோல் நீட் தேர்வின் பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் தமிழகத்தில் அவர்களை ஊக்குவித்து அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி வருவது அதிமுகாவின் வாக்கு வங்கியை காப்பாற்றிக் கொள்ளத்தான் இது போன்ற செயல்கள் வேதனை அளிக்கிறது,
நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் உள்ள பயத்தை போக்குவதற்கு தமிழக அரசு பல கோச்சிங் சென்டர்களை தொடங்கி அதன் மூலம் மாணவர்களின் பயத்தை போக்கி நீட் தேர்வுக்கு தயார்படுத்த வேண்டுமே தவிர நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை ஊக்குவிக்க கூடாது என்றார்.