ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது. கோவிலின் பின் பகுதியில் பவானி, காவேரி மற்றும் அமுத நதி போன்ற மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமாக உள்ளதால் முக்கூடல் சங்கமம், பரிகாரஸ்தலம் என பெயர் பெற்று விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பரிகார பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கொரானா நோய்த்தொற்று காரணமாக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கோவில் நடை சாத்தப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் நாளை 17-ம் தேதி மஹாளய அமாவாசை அன்று கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவேரி ஆற்றில் புனித நீராடி பரிகாரங்கள் செய்ய கூடினால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன் உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி மற்றும் கொடுமுடி ஆகிய கோவில்களில் பரிகாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து இன்று காலை கோவில் மண்டபத்தில் சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையாளர் சபர்மதி தலைமையிலும், பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவை கடைபிடிக்கும் நிலையில் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டுமே வர வேண்டும். அதேபோல், காவேரி ஆற்றங்கரை ஓரத்திலும், தனியார் திருமண மண்டபங்களிலும் யாரும் பரிகாரங்கள் செய்யக்கூடாது. மீறி பரிகாரங்கள் செய்யும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பரிகாரங்கள் செய்ய பக்தர்கள் வாகனத்தில் வருவது கண்டறியப்பட்டால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் பவானி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் சங்கமேஸ்வரர் கோவில் பணியாளர்கள், பரிகாரங்கள் செய்யும் புரோகிதர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு பவானி
செய்தியாளர்
ஜி. கண்ணன்