தூத்துக்குடியில் நள்ளிரவில் கார், வேன் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய உதவி ஆய்வாளர் மகன் உட்பட இருவர் கைது – 5 மணி நேரத்தில் கைது
தூத்துக்குடியில் ராஜீவ் நகர், பர்மா காலணி ஆகிய பகுதிகளில் நேற்று (12.06.2021) நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 8 கார், ஒரு வேன் மற்றும் ஒரு ஆட்டோ ஆகியவற்றின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் பைக்கில் சென்று சேதப்படுத்தியுள்ளனர்.சேதப்படுத்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் சிப்காட் காவல் நிலையத்தல் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள ஒளிப்பதிவுகளை ஆய்வு செய்ததில் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த பாரத் (25), அஜித்குமார் (21) ஆகிய இருவரும், அவர்களோடு மற்றொருவரும் சேர்ந்து பைக்கில் சென்று கார்,வேன் மற்றும் ஆட்டோவை சேதப்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதில் ஈடுபட்டுள்ள பாரத் என்பவர் தூத்துக்குடி நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் பிச்சையா மகன் என்பதும் தெரியவந்தது.
குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றும், எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
அதன்படி தனிப்படை போலீசார் சம்மந்தபட்டவர்களை தேடி வந்தபோது தபால் தந்தி நகரில் உள்ள பேச்சியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தவர்களை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து, அவர்களது இரு சக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு எதிரியையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இவ்வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி எதிரிகளை 5 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.