செய்திகள்

கேந்திர வித்தியாலயா பள்ளி எதற்க்கு வைகோ கேள்வி

*கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எதற்கு?*

*வைகோ கேள்வி*

பல்வேறு பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், தனித்தேசிய இனங்களின் கூட்டுதான் இந்திய ஒன்றியம் என்பதை மறுத்து, ஆர்எஸ்எஸ் சாதி மதவெறிக் கும்பல் வழிநடத்தும், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவில் ஒற்றை ஆட்சியை நிலைநிறுத்த அனைத்து வழிகளிலும் மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த முயற்சிகளுள் ஒன்றுதான், செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் திட்டம் ஆகும். இந்திய மக்கள் தொகைக் கணக்கின்படி, வெறும் 24000 பேர் மட்டுமே பேசுகின்ற அந்த மொழியை, 135 கோடி மக்களின் நாக்குகளில் திணிக்க முயற்சிக்கின்றார்கள்.

அதற்காக, பல மொழிகள் பேசும் இந்திய மக்களின் வரிப்பணத்தைப் பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து வருகின்றார்கள்.தமிழ் செம்மொழி என அறிவித்து விட்டு, வெறும் 22 கோடி ரூபாய்தான் வழங்கி இருக்கின்றார்கள். அதே நிலைமைதான், மராட்டியம், பெங்காலி உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கும்.

ஒன்றிய அரசின் கல்வித்துறை, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, இந்தியா முழுமையும் நடத்தி வருகின்றது. அங்கே, 1 முதல் 6 வரையில், மாநில மொழிகளைப் படிக்காலாம்.ஆனால், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையில், விருப்பப் பாடமாக ஒரு மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், அந்த விருப்பப் பாடங்களுள் ஒன்றாகத் தமிழ் இருந்தது. தமிழ்நாட்டில் பயின்ற மாணவர்கள், தமிழைத்தான் விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து படித்து வந்தனர்.

ஆனால், இப்போது தமிழ் மொழியை நீக்கி விட்டார்கள். இந்தி, ஆங்கிலத்துடன், ஆறாம் வகுப்பில் இருந்து சமஸ்கிருதம்தான் விருப்பப் பாடம் என ஆக்கி இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், இந்த நடைமுறையை ஓசை இல்லாமல் புகுத்தி விட்டார்கள்.

கொரோனா முடக்கத்தைப் பயன்படுத்தி, வீடுகளில் இணைய வழியில் படிக்கின்ற மாணவர்களுக்கு, சமஸ்கிருதத்தைத்தான் கற்பித்து வருகின்றார்கள்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் என் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள்.

தமிழை ஒழித்துக்கட்ட, நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

தமிழ் கற்பிக்காத பள்ளிகள் தமிழ்நாட்டில் எதற்கு?

கண்டிப்பாக மூன்றாவது மொழி படித்தாக வேண்டும் என்றால் உலகிலேயே ஆகக் கூடுதலான மக்கள் பேசுகின்ற, இந்தியாவுடன் பெரும் வணிகத் தொடர்புளும், பண்டைக் காலம் முதல் பண்பாட்டுத் தொடர்புகளும் கொண்டுள்ள சீன மொழியைக் கற்பிக்கலாம். அல்லது தென்அமெரிக்கக் கண்டம் முழுதும் பேசப்படுகின்ற ஸ்பெனீஸ் மற்றும் பிரெஞ்சு, ஜெர்மனி, ஜப்பானிய மொழிகளைக் கற்பிக்கலாம்.

எனவே, இந்தப் பிரச்சினையில், தமிழக அரசு உடனே கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மொழி கற்பிக்காத பள்ளிகளுக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை – 8

07.07.2021

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button