*தட்டச்சு பிழையால் தப்பிய போக்சோ குற்றவாளிக்கு சென்னை ஐகோர்ட்டு 5 வருட சிறைத் தண்டனை.*
சென்னை :
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. கணவர் வெளியூர் சென்றிருந்ததால் தனது குழந்தையை பக்கத்து வீட்டை சேர்ந்த எஸ்.பிரகாஷ் என்பவரின் திண்ணையில் தாய் விளையாட விட்டுள்ளார். கடைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பிய போது, குழந்தையின் உடலில் மாற்றங்களை தாய் கவனித்துள்ளார். குழந்தை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிந்து அதிர்ந்து போனார்.
இரண்டு நாட்கள் கழித்து குழந்தையை மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக, பிரகாஷ் மீது புகார் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. போக்சோ நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், புகார் அளிப்பதில் தாமதம், மருத்துவ ஆதாரங்கள் முழுமையாக இல்லை, குழந்தையின் உடலில் செம்மண் மட்டுமே இருந்ததாக கூறி கடந்த 2018 ம் ஆண்டு பிரகாஷை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தையின் தாய் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். பின்னர், போக்சோ நீதிமன்றம் பிரகாஷை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்தார். மேலும், நீதிபதி வேல்முருகன் தன் தீர்ப்பில், போலீசில் புகார் அளிப்பதில் தாமதம் மற்றும் வழக்கில் குறிப்பிடப்படும் வார்த்தைகளில் உள்ள தவறுகள் ஆகிய காரணங்களால் குற்றவாளிகள் தப்பித்து விட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.
போலீஸ் விசாரணையின் போது தாய் அளித்த வாக்கு மூலத்தில் குழந்தையின் உடலில் விந்து படிந்திருந்தது என்று வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அதன் ஆங்கில வார்த்தையான செமன் என்பதை (semen) என்று குறிப்பிடுவதற்கு பதிலாக செம்மண் என்று அதாவது எஸ்இஎம்எம்ஏஎன் (semman) என்று தவறுதலாக தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. இதனால் குழந்தை விளையாடும் போது, செம்மண் உடலில் படிந்ததாக கூறி குற்றவாளி விடுவிக்கப்பட்டுள்ளார். ஆங்கில வார்த்தையை தவறுதலாக தட்டச்சு செய்தது குற்றவாளிக்கு சாதகமாக அமைந்து விட்டது என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, பிரகாசுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தமிழ்நாடு அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.