நாகையை சேர்ந்த பிரபல யூடியூபர்ஸ் வீடுகளை சுற்றி வளைத்த 50 க்கும் மேற்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் ; இலங்கைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை கடத்திய 4 பேர் வீட்டில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக துப்பாக்கி ஏந்திய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு கும்பல் படகு மூலம் கடல்வழியே கஞ்சா கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகளை பார்த்த கடத்தல் கும்பல் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 280 கிலோ கஞ்சா மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றனர். அதனை தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் நான்கு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கஞ்சா கடத்தியது பிரபல நாகை மீனவன் என்ற யூட்யூப் நடத்தி வந்த கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த குணசீலன் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை இலங்கைக்கு கடத்திய நாகை மீனவன் என்ற யூடியூப் நடத்தி வந்தவர்கள் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கீச்சாங்குப்பம், சேவாபாரதி பகுதிகளை சேர்ந்த குணசீலன், சதிஷ், சிவசந்திரன், குணசீலன் ஆகியோர் வீடுகளை சுற்றி வளைத்த சுங்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி
ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர். நாகை மீனவன் யூட்யூப் சேனல் நடத்தி வந்த குணசீலன் உள்ளிட்ட கடத்தல் கும்பலின் வீடுகளின் உள்ளே புகுந்து சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலோடு தொடர்பு உள்ளதா என விசாரித்தனர். உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் சுமார் நான்கு மணி நேரமாக கடத்தல்காரர்களின் வீடுகளில் சோதனை நடத்திய நிலையில் தலைமறைவாக உள்ள கஞ்சா கடத்தல் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். நாகையில் யூடியூபர்ஸ் கஞ்சா கடத்திய விவகாரம் பூதாகரமான நிலையில் கடத்தல் கும்பல்களின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது மீனவ கிராமங்கள் மத்திய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை செய்தியாளர் : ச.ராஜேஷ்