நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊராட்சித்துறை அலுவலகத்தில் உள்ள கிராம சாலைகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்தறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். பாரத பிரதமர் சாலை திட்டத்தில் முறைகேடு, ஒப்பந்த பணிகளுக்கு கையூட்டு பெற்றதாக உதவி செயற்பொறியாளர் பேபி மீது நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு அதிக புகார்கள் போயுள்ளன. அதனை தொடர்ந்து இன்று மதியம் அதிரடியாக உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், புகாருக்கு உள்ளான அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் வெளியே செல்லாத வண்ணம் அலுவலகத்தை மூடி சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சித்ரவேலு தலைமையில் சுமார் இரண்டு மணிநேரம் நடந்த சோதனையில் கணக்கில் வராத 70 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே செயல்பட்டு வரும் ஊராட்சித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை செய்தியாளர்: ச.ராஜேஷ்