க்ரைம்

சாதி மறுப்பு திருமணத்தை தடுத்து நிறுத்திய பெற்றோர்கள் ;பெண்ணை இழுத்து வந்து காரில் ஏற்றிய போது மடக்கி பிடித்து பெண்ணை மீட்ட பொதுமக்கள் மற்றும் போலிசார் ; நாகை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

சாதி மறுப்பு திருமணத்தை தடுத்து நிறுத்திய பெற்றோர்கள் ; சார்பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்து போடும் போது சினிமா பாணியில் பெண்ணை தூக்கிய உறவினர்கள் ;  பெண்ணை இழுத்து வந்து காரில் ஏற்றிய போது மடக்கி பிடித்து பெண்ணை மீட்ட பொதுமக்கள் மற்றும் போலிசார் ; நாகை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த பாரதி (23) என்பவரும், நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி கிராமத்தை சேர்ந்த மதன்ராஜ் (24) என்பவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறவே, கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஒருக்கட்டத்தில் பெண்ணின் வீட்டில் இருவரது திருமணத்திற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இருவரும் பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக கடந்த 9 ஆம் தேதி திருச்சியில் இருந்து நாகை வந்த இருவரும், இன்று பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். முன்னதாக தாலிக்கட்டி நாகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணத்தை முடித்த காதல் ஜோடிகள், வழக்கறிஞர் மூலமாக முறைப்படி பதிவு திருமணம் செய்ய நாகை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அங்கு பதிவு திருமணம் செய்து இறுதியாக கையெழுத்து போடும் பொழுது நாகை சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே நுழைந்த பெண்ணின் உறவினர்கள், பெண்ணை அடித்து வலுக்கட்டாயமாக இழுத்துள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டு பெண்ணின் உறவினர்கள் பெண்ணை அங்கிருந்து நாகை நீதிமன்ற வளாகத்தின் வழியே இழுத்து வந்துள்ளனர். அப்போது பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் அவர்களிடம் கேட்டபோது, பெண்ணை காரில் ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் காரை மறித்து பெண்ணை கீழே இறக்கிவிடும்படி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பெண்ணின் தந்தை தான் ஒரு கிராம நிர்வாக அலுவலர் என்றும், தன்னை தடுக்க கூடாது என்றும் அங்கிருந்த ஒரே ஒரு பெண் காவலரிடம்  வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த கூடுதல் போலிசார் காரை மறித்து பெண்ணை மீட்டு நீதிபதியிடம் அழைத்து சென்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட காதலர் மதன்ராஜ், பெண்ணை கடத்தி சென்றதாகவும், இருவருக்கும் பாதுகாப்பு வழங்கி பெண்ணை மீட்டுத்தர வேண்டும் என்றும் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். நாகையில் நடந்த சாதி மறுப்பு திருமணத்தை தடுத்து நிறுத்தி பெண்ணை பெற்றோர்கள் நீதிமன்ற வளாகம், எஸ்பி அலுவலகம் அருகிலேயே வலுக்கட்டாயமாக தூக்கி செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை செய்தியாளர்: ச.ராஜேஷ்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button