முதலமைச்சர் முக.ஸ்டாலின் கேரளா முதல்வருக்கு கடிதம்…
கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் எதிரொலியாக, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படும் என்று கேரளா முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, இரண்டு மாநில மக்களின் இதயப்பூர்வ மற்றும் வரலாற்றுப் பூர்வமான உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று நீங்கள் 24ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தீர்கள். இதை நான் மிகவும் ஆமோதிக்கிறேன்.கடந்த 10 நாட்களாக கேரளாவில் ஏற்பட்டு வரும் வெள்ளங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் சேதங்கள் குறித்து தமிழக அரசும் தமிழக மக்களும் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம் என்பதையும் அங்குள்ள மக்களின் பிரச்சினை தீர்வதற்கு தேவையான எந்தவித உதவியையும் அளிக்க தயாராக இருக்கிறோம் என்பதற்கு உறுதி அளிக்கிறேன்.இதுதொடர்பாக நான் ஏற்கனவே எல்லையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறேன். வெள்ள நிவாரணத்திற்காக அனைத்து உதவிகளையும், பொருள் வனியோகங்களையும் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன். முல்லைப் பெரியாறை பொறுத்தவரை, அதன் நீர்மட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தமிழக அதிகாரிகள், உங்கள் மாநில குழுவினருடன் தொடர்ந்து இதுபற்றி பேசி வருகின்றனர்.27ஆம் தேதி (நேற்று) காலை 9 மணி நிலவரப்படி அதன் நீர்மட்டம் 137.60 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு 2,300 கனஅடியாக இருந்தது. நீங்கள் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டபடி வைகை ஆற்றின் சுரங்கப்பாதை மூலம் அதிகபட்ச நீரை எடுத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது 2,300 கனஅடி நீர் அந்த சுரங்கப்பாதை மூலம் வைகை ஆற்றுப்படுகைக்கு நேற்று காலை 8 மணியில் இருந்து எடுக்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் உத்தரவின்படி அனுமதிக்கப்பட்ட நீர் கொள்ளளவிற்கு ஏற்ப நீர்மட்டம் உள்ளது.இந்த நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசியிருக்கிறேன். அதன் நீர்மட்டத்தை உன்னிப்பாக தொடர்ந்து கவனித்து அதற்கேற்றபடி நீர் வெளியேற்றத்தை ஒழுங்குபடுத்தும்படி உத்தரவிட்டிருக்கிறேன். கூடுதலாக, நீரை வெளியேற்றுவதற்கு முன்பதாக உங்கள் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக, நீரின் அளவு குறித்தும், அதை வெளியேற்றுவது குறித்தும் உள்ள தகவல்களை அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளேன்.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழகமுதல்வர் #கேரளமுதல்வர் #முல்லைப்பெரியாறுஅணை #TamilNadu #Kerala