இனிப்பு தயாரிப்பிடத்தில் சிலிண்டர் வெடிப்பு…
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பாளையம் காமாட்சி அம்மன் தெரு, கிழக்கு வீதியில் வசித்துவருபவர் ராஜமாணிக்கம்.இவர் மகன் சுரேஷ், இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளிக்கு பலகாரங்களை தயாரித்து விற்பனை செய்வர். அந்த வகையில், இந்த வருடமும் பலகாரம் செய்வதற்காக சுரேஷ் அங்குள்ள காமாட்சி அம்மன் கோயில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்திருக்கிறார். தீபாவளிக்கு முன்னதாக காரம், இனிப்பு, பலகார வகைகளைத் தயார் செய்யத் தொடங்கியிருக்கிறார். 5-க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைத்து, பெரிய பாத்திரங்களில் 10-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுவந்திருக்கின்றனர்.இந்த நிலையில், இன்று வழக்கம்போல் அனைவரும் இனிப்பு தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது, திடீரென எண்ணெய் கொதிக்கும் வாணலியிலிருந்து எண்ணெய் அதிக சூட்டால் பொங்கி, அடியில் இருக்கக்கூடிய சமையல் எரிவாயு குழாயில்பட்டு, தீப்பற்றியிருக்கிறது. அதை யாரும் கண்டுகொள்ளாததால் தீ சிலிண்டருக்குப் பரவியிருக்கிறது.சிலிண்டர் விபத்துஅதைக் கண்டு, அங்கிருந்தவர்கள் அனைவரும், பதறி அடித்துக்கொண்டு வெளியில் ஓடி வந்திருக்கின்றனர். இந்த நிலையில், சிறிது நேரத்திலேயே அந்த சமையல் எரிவாயு சிலிண்டர், பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்கிறது. இந்த விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பலகாரம், இனிப்பு தயாரிக்கும் மாவு, எண்ணெய்ப் பொருள்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகின. இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த இராசிபுரம் தீயணைப்புத்துறையினர் உடனடியாகத் தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து இராசிபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #நாமக்கல் #சிலிண்டர்வெடிப்பு