நடிகர் ரஜினிகாந்த் நேற்று (28ம் தேதி) மாலை திடீரென சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், ரஜினிகாந்தின் மனைவி லதா வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தார். ஆண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளும் முழு உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருநாள் அப்சர்வேஷனிற்கு பின்னர் வீடு திரும்புவார் என்றும் ரஜினிகாந்த் தரப்பில் கூறப்பட்டது.இந்நிலையில், ரஜினிகாந்தின் உறவினர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நேற்றிரவு காவேரி மருத்துவமனைக்கு சென்று ரஜினிகாந்தை சந்தித்து, அவர் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். அவர் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், அவர் விரைவில் வீடு திரும்புவார். ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியாவதற்கு முன் அவர் வீட்டில் இருப்பார்” என்றார்.அதையடுத்து, ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டிருக்கிறது.அதில், ‘நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு தற்போது சரி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருகிறார். சிகிச்சை முடிந்து இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #ரஜினிகாந்த் #மூளைஅடைப்பு #காவேரிமருத்துவமனை #Rajini #SuperstarRajini