கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னிய சமுதாயத்திற்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு அளித்துள்ளது. இந்த உத்தரவைக் கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களில் பாமக மற்றும் வன்னியர் பேரவை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியார் சிலை முன்பு சேலம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது சிலர் அவ்வழியாக வந்த அரசு நகர பேருந்து மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமானது. மேலும், பேருந்து மீது கற்களை வீசி கண்ணாடி உடைத்த இருவரை ஆத்தூர் நகர போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ், மாநில துணை தலைவர் கார்த்திக், மாவட்ட செயலாளர் கதிர் ராஜரத்தினம், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இது குறித்து சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் கூறுகையில், “கடந்த 40 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு போராடி பெற்ற வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்திருப்பது சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, இட ஒதுக்கீடு உரிமையை பாதுகாக்க வேண்டும். மீண்டும் இட ஒதுக்கீடு உறுதி செய்யும் வகையில் போராட்டம் தொடர்ந்து நடத்துவோம். தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னிய சமூகத்திற்கு செய்த துரோகம்” என்று கூறினார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பாமக #வன்னியர்இடஒதுக்கீடு #TamilNadu #PMK