போராட்டங்களின் போது, பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால், போராட்டத்தை நடத்தியவர்களிடம் இருந்து, இரண்டு மடங்கு இழப்பீடு வசூலிக்கும் புதிய சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
விரைவில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
இது குறித்து மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளதாவது: “அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு நடத்தப்படும் போராட்டத்தின்போது, சில சமயங்களில் வன்முறை ஏற்படுகிறது. பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு ஏற்படும் சேதத்தின் மதிப்பைவிட இரண்டு மடங்கு வசூலிக்க புதிய சட்டம் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளோம். போராட்டத்தை நடத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து இது வசூலிக்கப்படும். இதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடக்க உள்ள சட்டசபை கூட்டத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்” என அவர் கூறினார்.
இது குறித்து அரசு உயரதிகாரிகள் கூறியதாவது: ‘சேதத்தின் மதிப்பை நிர்ணயிக்க, இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி அடங்கிய தீர்ப்பாயம் அமைக்கப்படும். சேதமடைந்த பொது சொத்து தொடர்பாக சம்பந்தபட்ட துறையின் அதிகாரிகள் மற்றும் தனியார் சொத்தின் உரிமையாளர்கள், வன்முறை நடந்த 30 நாட்களுக்குள் இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
தீர்ப்பாயம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில், இழப்பீட்டை வசூலிக்கும் அதிகாரி, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 90 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து 90 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம். இந்த புதிய சட்டத்தின்படி, சேதமடையும் சொத்துகளுக்கு இரண்டு மடங்கு இழப்பீடு 15 நாட்களுக்குள் வசூலிக்கப்படும். இழப்பீடு தாமதமானால், அதற்கு வட்டியையும் சேர்த்து செலுத்த நேரிடும்.
வன்முறையின்போது சேதமடைந்த, பைக், கார், வீடு, அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடு கேட்க முடியும். இந்த இழப்பீட்டு வழக்கைத் தவிர, வன்முறை தொடர்பாக தனியாக கிரிமினல் வழக்கும் தொடரப்படும்’ என அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம், 1992ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 2013ம் ஆண்டு, மரக்காணத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக பாமகவுக்கு எதிராக இந்த சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘கடந்த 1992ல் இருந்து இந்த சட்டம் இருந்தாலும், 29 ஆண்டுகளாக இந்த சட்டம் திறமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்த சட்டத்தின் அடிப்படையில் எத்தனை பேரிடம் இழப்பீடுகள் வசூலிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இனிவரும் காலங்களில் இந்த சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும்’ எனக் கூறியிருந்தது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள்