கனமழை பாதிப்பு : முதல்வரிடம் விசாரித்த மோடி
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதும் மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் மழை பெய்தாலும், சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டியது.ஒரே நாள் இரவில் சுமார் 25 செ.மீ. மழை பதிவானது
தொடர் மழையால் சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது . இந்நிலையில் , வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார் .
இதனிடையே, மழை நீடிக்கும் என்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கப்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மற்ற மாவட்டங்களில் விடுமுறை அளிப்பதைப் பற்றி மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதாரங்கள் குறித்தும் பிரதமர் மோடி கேட்டு தெரிந்துகொண்டார்.