செய்திகள்

முதல்வர் முக.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது!! விசிக அறிவிப்பு!!

முதல்வர் முக.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது!! விசிக அறிவிப்பு!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ” ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், காசி ஆனந்தன், ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவரிசையில் 2021ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்” விருதினை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம். கடந்த சில பத்தாண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையான ‘மாநில ஆதிதிராவிடர்- பழங்குடியினர் ஆணையம் அமைத்திட வேண்டுமென்பதை’ ஏற்று அதனை வெற்றிகரமாக மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். அதற்கான சட்டமொன்றை இயற்றியதுடன் அந்த ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட பிற பொறுப்பாளர்களையும் உடனடியாக நியமித்துச் சாதனை படைத்துள்ளார்.

அத்துடன், பல பத்தாண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று “பண்டிதர் அயோத்திதாசர் ” நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் மணிமண்டபம் அமைக்கப்படுமெனவும், பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிப்புச் செய்துள்ளார். மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவையும் தனது தலைமையில் உருவாக்கியுள்ளார். இத்தகைய அரும்பணிகளைப் பாராட்டி இந்த ஆண்டுக்கான(2021) “அம்பேத்கர் சுடர் ” விருதினை மு.க. ஸ்டாலினுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

அடுத்து, பெரியாரின் வழியில் சமூகநீதிக்காகத் தொடர்ந்து பாடாற்றிவரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைப் பாராட்டி அவருக்கு ” பெரியார் ஒளி ” விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மற்ற நான்கு விருதுகளுக்கான சான்றோரையும் அவ்வாறே அடையாளம் கண்டு அவர்களுக்கு வழங்குவதில் உவகை அடைகிகிறோம். இந்த விருதுகள் வழங்கும் விழா வரும் டிசம்பர் திங்கள் இறுதியில் சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மிகவும் எளியமுறையில் கொண்டாடப்படுமெனவும் அதற்கான தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

2021-ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் பட்டியல்:

அம்பேத்கர் சுடர் – மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர்.

பெரியார் ஒளி- வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்.

காமராசர் கதிர் – நெல்லை கண்ணன்.

அயோத்திதாசர் ஆதவன்- பி.வி.கரியமால், குடியரசு கட்சி தலைவர்.

காயிதேமில்லத் பிறை- அல்ஹாஜ் மு.பஷீர் அகமது.

செம்மொழி ஞாயிறு – செம்மொழி க.இராமசாமி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசய்திகள் #தமிழகமுதல்வர் #முகஸ்டாலின் #அம்பேத்கர்சுடர் #விடுதலைசிறுத்தைகள்கட்சி # MKStalin

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button