நிர்வாண பூஜை, நரபலி… போலி சாமியாரால் பரபரப்பான கர்நாடகா. பின்னணி என்ன…?
ஒருவர் நிர்வாணமாக பூஜையில் அமர வேண்டும் என கூறி பணப்பசியுடன் சேர்த்து காமப்பசியையும் தீர்த்து கொள்ள திட்டம் தீட்டியுள்ளார் ஷாஹி குமார்
கர்நாடகா மாநிலம் ராமநகர மாவட்டம் பூஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ நிவாஸ். விவசாயியான இவர் பூஹள்ளியில் உள்ள தனது முன்னோர்கள் கட்டிய வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அப்போது தமிழ்நாட்டை சேர்ந்த ஷாஹி குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஷாஹி குமாரை பூஹள்ளி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் ஸ்ரீ நிவாஸ். 75 ஆண்டு பழமையான வீடு அது என்பதை ஸ்ரீநிவாஸ் மூலம் அறிந்து கொண்ட ஷாஹி குமார், வீட்டில் பல கோடி மதிப்பிலான புதையல் இருப்பதாகவும், அதை விரைவில் எடுக்க வேண்டும் என்றும், எடுக்க தாமதப்படுத்தினால் அந்த புதையல் ஸ்ரீநிவாஸ் குடும்பத்தினரின் நிம்மதியை குலைத்து விடும் என்றும் ஏகத்துக்கு கதை அளந்துள்ளார்.
பாமர விவசாயியான ஸ்ரீ நிவாஸ் ஷாஹி குமாரின் ஜகஜால பேச்சாலும், புதையலின் மேல் கொண்ட மோகத்தாலும் புதையலை வெளியில் எடுக்க ஷாஹி குமாரின் உதவியை நாடியுள்ளார்.
தான் கூறிய கம்பி கட்டும் கதையை நம்பிய ஸ்ரீ நிவாஸால் குதுகலமடைந்த ஷாஹி குமார், அந்த வீட்டில் புதையுண்டு இருக்கும் புதையலை வெளியில் வரவைக்க ஸ்ரீநிவாஸின் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் நிர்வாணமாக பூஜையில் அமர வேண்டும் என கூறி பணப்பசியுடன் சேர்த்து காமப்பசியையும் தீர்த்து கொள்ள திட்டம் தீட்டியுள்ளார் ஷாஹி குமார்.
மேலும் பரிகார பூஜை செய்வதற்காக ஷாஹி குமார் ஸ்ரீ நிவாஸிடமிருந்து ரொக்கமாக ரூபாய் 20,000 முன்பணம் பெற்று தமிழ்நாடு திரும்பியுள்ளார் . பின்னர் கொரோனா பெருந்தொற்றால் கர்நாடக மாநில எல்கைகளுக்குள் வெளி மாநிலத்தினர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால் பரிகார பூஜை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் மீண்டும் பரிகார பூஜை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ஸ்ரீ நிவாஸ் வீட்டில் ஒரு அறையைத் தேர்ந்தெடுத்து, அங்கே நிர்வாண பூஜை செய்ய திட்டமிட்டுள்ளார் ஷாஹி குமார். பரிகார பூஜையில் ஷாஹி குமாரின் முன்னே முழு நிர்வாணமாக அமர்வதற்கு ஸ்ரீ நிவாஸின் குடும்பத்தினருக்கு பதிலாக ஒரு தினக்கூலி பெண்ணை ரூபாய் 5000 கொடுத்து அழைத்து வந்துள்ளனர். அப்போது அந்த தினக்கூலி பெண்ணின் 4 வயது மகளும் பூஜைக்கு உடன் வந்துள்ளார்.
இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஷாஹி குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த தினக்கூலி பெண் மற்றும் அவரின் 4 வயது மகளையும் மீட்டனர். அப்போது தான் ஸ்ரீ நிவாஸுக்கு தான் விபூதி அடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
பின்னர் காவல்துறையினர் ஸ்ரீ நிவாஸ் அளித்த புகாரின் பெயரில் ஷாஹி குமார், மோகன், கட்டிட தொழிலாளர்களான லட்சுமி நரசப்பா, லோகேஷ், நாகராஜ், பார்த்த சாரதி என 6 நபர்களை கைது செய்தனர்.
அந்த தினக்கூலி பெண்ணின் 4 வயது மகளும் அவருடன் பூஜையின் போது மீட்கப்பட்டதால் நரபலி கொடுக்க ஏதேனும் திட்டமிடப்பட்டதா என்ற கேள்விகள் கர்நாடக மாநிலம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இது குறித்து ராமநகர காவல்துறை ஆய்வாளர் கிரிஷ் நரபலி குறித்த தகவல்களை வெறும் வதந்தி என மறுத்துள்ளார்.
இவ்வாறு நிர்வாண பூஜை செய்ய திட்டம் தீட்டிய போலி சாமியாரையும் அவரது கூட்டாளிகளையும் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் ராமநகர மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.