செய்திகள்

ஆன்லைனில் தேர்வு : மாணவர்களுக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை!

ஆன்லைனில் தேர்வு : மாணவர்களுக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை!

அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கல்லூரித் தேர்வுகள் நேரடி முறையில் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் முன் யோசனையற்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்த வலியுறுத்தி மதுரையில் அறவழியில் போராடிய மாணவர்கள் 710 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 150க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்திருக்கும், ஆளும் திமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் கொரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக நாடே முடங்கி இருந்த சூழ்நிலையில், பள்ளி, கல்லூரிகளும் முற்றுமுழுதாக மூடப்பட்டு, வகுப்புகள் மட்டுமன்றி தேர்வுகளும் இணைய வழியிலேயே நடத்தப்பட்டன.மேலும், மாணவர்களின் உயிர் பாதுகாப்பினை கருத்திற்கொண்டே தேர்வுகள் ஏதும் எழுதாமலேயே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கும் நடைமுறையும் முந்தைய அதிமுக அரசால் மேற்கொள்ளப்பட்டது.

தொற்றுப் பாதிப்பிலிருந்து தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்துள்ள போதிலும், இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு நாடு திரும்பவில்லை என்பதே மறுக்கவியலா உண்மையாக உள்ளது.தமிழ்நாடு அரசும் ஊரடங்கை இன்னும் முழுமையாகத் திரும்பப் பெறாமல் தளர்வுகளோடு நீட்டித்து வருவது மட்டுமின்றி, கொரோனா தடுப்பூசி முகாம்களையும் தீவிரப்படுத்தியிருப்பது, கொரோனா பெருந்தொற்று ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை, மீண்டும் நோய்த்தொற்று ஏற்படும் பேராபத்துள்ளதை அரசே ஏற்றுக்கொள்கிறது என்பதையே வெளிக்காட்டுகிறது.

இத்தகைய நெருக்கடி மிகுந்த சூழலில், பாடங்களை இணையவழியில் நடத்திவிட்டு, தேர்வுகளை நேரடி முறையில் நடத்தும் அரசின் அறிவிப்பால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவேதான் தற்போதைய சூழலில் நேரடித் தேர்வுமுறை வேண்டாமென்று மாணவர்கள் அறவழியில் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.மாணவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய சூழல் ஏற்பட்டதை உணர்ந்து, அவர்களது கோரிக்கையில் உள்ள நியாயங்களைப் புரிந்து, பொறுப்புணர்வுடன் செயலாற்றியிருக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, போராடிய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதும், அவர்களை சமூகவிரோதிகள் போல் கைது செய்வதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

படிக்கும் மாணவர்களை கைது செய்வதில் காட்டிய வேகத்தையும், தீவிரத்தையும் பாலியல் குற்றவாளிகளை கைது செய்வதில் ஆளும் திமுக அரசு ஏன் காட்டவில்லை? என்ற கேள்வியும் எழுகிறது.எனவே, தமிழ்நாடு அரசு அவசரகதியில் நேரடி முறையில் கல்லூரிப் பருவத்தேர்வுகளை நடத்த முடிவெடுத்திருப்பது, மாணவ, மாணவியரின் உடல் மற்றும் உள நலனைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதைக் கருத்திற்கொண்டு, தற்போதைய சூழலில் இணைய வழியிலேயே கல்லூரித் தேர்வுகளை நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், நேரடி தேர்வு முறைக்கு எதிராக அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென, நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்”.இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button