குடகனாறு ஆற்றுப் பகுதியில் புதிய பாலம் : அமைச்சர் பெரியசாமி உறுதி!!
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள குடகனாறு ஆற்றுப்பகுதியில் ஆத்துப்பட்டிக்கு செல்ல புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்
வடகிழக்கு பருவமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. நேற்று முதல் விட்டுவிட்டு மலைப்பகுதிகளிலும், மலை ஒட்டிய கிராம பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது, அந்த வகையில் திண்டுக்கல் குடஎனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள ஆத்துப்பட்டிக்கு செல்லும் தற்காலிக தரைப்பாலத்தில் வெள்ள நீர் அதிகமாக வந்ததன் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது இதனால் கிராம மக்கள் ஊரை விட்டு வெளியில் வர பாதை இல்லாமல் தவித்து வருகின்றனர். தற்காலிக தரைப்பாலம் துண்டானதை அடுத்து இன்று அதிகாலை முதல் தீயணைப்புத் துறையினரும் வருவாய்த் துறையினரும் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் விசாகன் ஆகியோர் அனைத்து துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டனர் அப்போது உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மறு கரையிலிருந்து பொதுமக்கள் அமைச்சரிடம் தங்கள் பகுதிக்கு பாலம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியசாமி,
கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பேரிடர் காலங்களில் ஆத்துப்பட்டி கிராம மக்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இதுபோன்று தவித்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் இப்பகுதி மக்களுக்கு பாலம் கட்டித்தர எந்த நடவடிக்கையும் அதிமுக அரசு எடுக்கவில்லை, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆத்துப் பட்டிக்கு அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதிக்கு 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டி திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது.
அதேபோல ஆத்துப்பட்டி மக்களுக்கும் பாலம் கட்டப்பட வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர், நெடுஞ்சாலைதுறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் பரிந்துரை செய்துள்ளோம் வரும் 2022ஆம் ஆண்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்