விவசாயிகள் போராட்டம் வெற்றி கண்டது!!! மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பபெறுகிறது மத்தியஅரசு!!
விவசாய மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு, இந்தியா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற இருப்பதாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் விலகி தனிக்கட்சி தொடங்கிய, கேப்டன் அமரீந்தர் சிங், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் பாஜகவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்கு மேலாக மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களின், இந்த போராட்டம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பேசும் பொருளானது. அமெரிக்க பாப் பாடகி ரிஹானா முதல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் வரை போராடும் விவாசாயிகளுக்கு ஆதரவளித்து வந்தனர். ஜனவரி 26 இந்திய குடியரசுத் தினத்தன்று விவசாய அமைப்புகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறை சம்பவம் இந்தியாவின் குற்றமற்ற ஆத்மாவை கலங்கப்படுத்துவதாக அமைந்தது.
மத்திய அரசு மோதல் போக்கை கைவிட்டு உடனடியாக வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை குரல்கள் எழுந்தது. இதற்கிடையே, 2021 அக்டோபர் 3-ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவாசாயிகள் மீதி மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை ஏற்றிய காட்சிகள் காண்போரை நிலை குலைய வைத்தது. இருந்தாலும், கடந்த மாதம் வரை வேளாண் சட்டங்களை திரும்பப் பேரும் பேச்சுக்கே இடமில்லை என்பதே அதிகாரத்தின் பதிலாக அமைந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பு வரும் என யாரும் எதிர்பார்க்காத நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது ஒட்டுமொத்த தேசத்தையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கூறியுள்ளார். மேலும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு அவர்கள் தத்தம் பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கோரியுள்ளார்.
விவசாயிகள் எதிர்த்த மூன்று வேளாண் சட்டங்கள் என்னென்ன?
1. அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும்.
2. ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல்.
3. ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது.இவை தான் விவசாயிகள் எதிர்த்த மூன்று வேளாண் சட்டங்களாகும்.