போராட்டம் வாபஸ் பெறப்படாது : மசோதா ரத்து செய்யும் வரை தொடரும்!! பஞ்சாப் விவசாயி கோல்டன் சிங்
பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வேளாண் விளைபொருட்களை சுலபமாக விற்பனை செய்வதற்கு பல திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. 3 வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
3 வேளாண் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மிக விரிவான விவாதம் நடத்தப்பட்டு உள்ளது. மூன்று வேளாண் சட்டங்களின் நலன்களை விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை.
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்து இருக்கிறோம். ஒரு வருடத்துக்கு மேலாக போராடி வரும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
டெல்லி எல்லையில் போராடிவரும் விவசாயிகளுக்கு வெற்றி என பஞ்சாப் விவசாயி கோல்டன் சிங் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம் எனவும் கூறியுள்ளனர்.
போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்பட மாட்டாது. நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காக காத்திருப்போம் என்றும் விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் ட்வீட் செய்துள்ளார். விவசாயிகளின் பிற பிரச்சினைகளையும் அரசு விவாதிக்க வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.