பஸ் ஸ்டாண்டில் கடைகள் வேண்டும் : திண்டுக்கல் வியாபாரிகள் தர்ணா போராட்டம் !!
கடைகளை ஒதுக்கக்கோரி பஸ் நிலையத்தில் வியாபாரிகள் தர்ணாதிண்டுக்கல் பஸ் நிலைய வளாகத்தில் புதிதாக ஒரு வணிக வளாகம் கட்டப்பட்டது. இங்குள்ள கடைகளை ஏற்கனவே குத்தகைக்கு எடுத்த மாற்றுத்திறனாளி வியாபாரி உள்பட சிலர் அந்த வணிக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தங்களுக்கு கடைகளை ஒதுக்கவில்லை. இதுதொடர்பாக வியாபாரிகள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் வணிக வளாகத்தில் உள்ள கடைகள் வேறு நபர்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
காந்திமார்க்கெட் புதிதாக கட்டப்பட்ட போது அங்கு ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதேபோல் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளையும் ஏற்கனவே அங்கு கடை வைத்திருந்தவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் கடைகள் ஒதுக்கப்படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
இதற்கிடையே வியாபாரிகள் போராட்டம் குறித்து தகவலறிந்த வடக்கு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.