இனி வாரத்திற்கு 6 நாட்கள் கல்லூரி : அதுவும் நேரடி வகுப்புகள் !!!
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதேநேரம் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன்காரணமாக, கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தற்போது கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தநிலையில், ஆன்லைனில் தான் தேர்வுகள் நடத்தவேண்டும் என வலியுறுத்தி மதுரையில் கல்லூரிகள் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 20 முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் நடைபெற்று வந்த நிலையில் இனி வாரத்தில் 6 நாட்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; கல்லூரிகளில் வாரத்தில் 6 நாட்களும் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடைபெறும். 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்துவந்த நிலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சுழற்சி முறை அல்லாமல் இனி நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத் திட்டங்களை வழங்கிட வேண்டும்.
ஜன. 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடத்தவும், அதற்கு முன்பாக மாதிரி தேர்வுகளை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. உயர்க்கல்வித்துறை உத்தரவை அனைத்து கல்லூரிகளும் முறையாக கடைபிடிக்கிறதா? என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.