ஜெயலலிதா மரணம் : ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது – அப்போலோ பதில் மனு….
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.
ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் பல்வேறு சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது வழக்கு விசாரணை நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.
அப்போலோ மருத்துவமனையின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இன்று அந்த வழக்கு விசாரணையின்போது, அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் பதில் மனுவில், ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராக முடியாது. ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது.
இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கும் நிலையில், எங்கள் மருத்துவர்களை மட்டும் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கின்றனர்.ஆணையத்தில் நாங்கள் அளிக்கும் தகவல்களையெல்லாம் ஆணையம் வேண்டுமென்றே கசியவிடுகிறது.
அதனால் எங்களின் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகிறது. அதைத் தடுக்கும்விதமாக நீதிமன்றத்தை நாடி இனி ஆணைய வழக்கு விசாரணையில் ஆஜராக முடியாது எனத் தெரிவித்திருக்கிறோம்.
அவர்கள் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, அப்போதைய அதிமுக அரசு சொன்னதாலையே சிசிடிவி-க்கள் அகற்றம் செய்யப்பட்டன. ஜெயலலிதாவுக்கு பிரைவசி தேவைப்படும் எனக் கூறியதால் சிசிடிவிக்கள் அகற்றப்பட்டன எனக் கூறப்பட்டிருக்கிறது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.