செய்திகள்

கி.பி 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடைக் கல்வெட்டு கண்டுபிடிப்பு

கி.பி 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடைக் கல்வெட்டு கண்டுபிடிப்பு….

மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடியில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலங்களைத் தானமாக வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெருங்குடியைச் சேர்ந்த முதுகலை வரலாற்றுத்துறை மாணவர் சூரிய பிரகாஷ் என்பவர் தங்கள் ஊரின் பெரிய கண்மாய் அருகே கல்வெட்டு இருப்பதாகக் கூறிய தகவல்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் , முனைவர் இலட்சுமண மூர்த்தி, ஆதி பெருமாள் சாமி ஆகியோர் கொண்ட குழு கள ஆய்வு செய்தபோது ஆலமரத்து விநாயகர் கோவில் அருகே குத்துக்கால் பாதி புதைந்த நிலையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. இக்கல்வெட்டினைப் படி எடுத்து ஆய்வு செய்தபோது கி.பி. 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு என்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து உதவிப் பேராசிரியர் முனீஸ்வரன், இலட்சுமண மூர்த்தி கூறியதாவது :

வேளாண்மை மண்பாண்டம் தொழிலில் சிறப்புடன் வாழ்ந்த பெருங்குடியில் பெரிய கண்மாய் ஆலமரத்து விநாயகர் கோவில் எதிரே கல்தூண் உள்ளது. அவை மண்ணில் பாதி புதைந்த நிலையில் 5 அடி நீளம் கொண்ட கல் தூணில் எட்டுக் கோணம் , இரண்டு பட்டை வடிவத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.

கோட்டோவியம்

தூணின் மேல் பகுதி பட்டையில் மூன்று பக்கம் நில அளவை குறியீடுகள் ,மற்றொரு பக்கம் திருமாலின் வாமன அவதாரத்தின் குறியீடும் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. கோட்டோவியம் நிலத்தை வைணவக் கோவிலுக்கு நிலக்கொடையாகக் கொடையாக கொடுத்ததைச் சுட்டிக்காட்டுகிறது.

கல்வெட்டு

பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு ‘மங்கலச் சொல், மெய்க்கீர்த்தி, அரசன் பெயர், ஆண்டுக் குறிப்பு, கொடை கொடுத்தவர், கொடைச் செய்தி, சாட்சி, காப்புச் சொல், எழுதியவா் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கொடையானது நிலமாக இருப்பின் அதன் நான்கு எல்லைகள், பொன் என்றால் அதன் அளவு ஆகியவை இடம்பெறும் . இப்பகுதியில் கண்டறியப்பட்ட இக்கல்வெட்டு
கல்தூணின் கீழ்பட்டை பகுதியில்
12 வரிகள் இடம் பெற்றிருந்தன.

இக்கல்வெட்டை மைப்படி எடுத்து ஆய்வு செய்தபோது எழுத்தமைதியின் வடிவத்தை வைத்து கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டது. பல எழுத்துகள் தேய்மானம் ஏற்பட்டதால் முழுப் பொருளை அறிய முடியவில்லை. தமிழகத் தொல்லியல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற இணை இயக்குநர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்களின் உதவியுடன் கல்வெட்டு படிக்கப்பட்டது.

இக்கல்வெட்டு நிலதானம் வழங்கிய செய்தியும் ஆவணமாக எழுதி கொடுத்தவரின் பெயர் , அதன் நிலத்தின் நான்கு எல்லைப் பகுதியை குறிப்பிட்டுள்ளது. விக்கிரம பாண்டியன் பேரரையான் என்ற சிற்றரசன் இப்பகுதியை ஆட்சி செய்ததாகவும் அவரின் ஆட்சியில் நிலதானம் வழங்கியவரையும் ஆவணமாக எழுதிக் கொடுத்த குமராஜன் என்பவரின் பெயரும் கல்வெட்டு இறுதி வரியில் இருப்பதை அறிய முடிகிறது. என்றார் .

செய்திகள் : நீதிராஜன், மதுரை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button