திட்டமிட்டப்படி மாநாடு உறுதி!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதிக்கு (நாளை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாநாடு ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன் தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என பதிவிட்டுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது படத்தின் சாட்டிலைட் உரிமை, மற்றும் ஓடிடி உரிமை விற்பனையாவதில் ஏற்பட்ட சிக்கல்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப் பட்டதாக படக்குழு வட்டாரத்தில் கூறப்பட்டது.
தற்போது அந்த சிக்கல்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டதால் படம் திட்டமிட்டபடி நாளை திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.