என்னங்க சார் உங்க சட்டம்!! வெப் சீரிஸ் பார்த்த மாணவனுக்கு மரண தண்டனை !!!
கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் எழுதி இயக்கியுள்ள ஸ்க்விட் கேம் என்னும் இணைய தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியானது.
தென்கொரிய படைப்பான ‘ஸ்க்விட் கேம்’. விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் வெளியான சில தினங்களிலேயே சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்றது. உலக புகழ்பெற்ற 10 வெப்சீரிஸ்களிலும் இடம்பெற்றது.
21.4 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்து எடுக்கப்பட்ட ஸ்க்விட் கேம் தொடர், தற்போது சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருக்கலாம் என ப்ளூம்பெர்க் நிறுவனம் கணித்துள்ளது. உலகம் முழுக்க வெற்றி பெற்ற இத்தொடரை வடகொரியாவில் பென் டிரைவ் மூலம் பதிவேற்றம் செய்து விற்பனை செய்த ஒருவருக்கு துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
மேலும், ‘ஸ்க்விட் கேம்’ பார்க்க ஆவலுடன் பென் டிரைவை வாங்கிய உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆறு மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஆசிய செய்திகளுக்கான தனியார் ஊடகமான ரேடியோ ஃப்ரீ ஏசியாவில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் வெளியேற்றப்பட்டு சுரங்கங்களில் வேலை செய்யும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களுக்கு வழங்கிய நபர் இந்த ஸ்க்விட் கேமின் காப்பியை சீனாவில் வாங்கி அதை வட கொரியாவிற்கு கொண்டு வந்து பென்டிரைவ்களில் ஏற்றி பிரதிகளை விற்றதாகக் கூறப்படுகிறது. வடகொரியா அரசின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.