கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து 99 கைதிகளை விடுதலை செய்ய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை மத்திய சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்று அவர்கள் வெளியே சென்றால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.
கோவை மத்திய சிறையில் 10 ஆண்டுகள் கடந்தவர்கள் 150-க்கும் மேலானவர்கள் உள்ளனர். இதில் முதல் கட்டமாக நடத்திய ஆய்வில் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத நன்னடத்தை அடிப்படையில் 99 கைதிகளை விடுதலை செய்ய தகுதி வாய்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களை விடுதலை செய்வதற்கான பணிகள் மற்றும் இது தொடர்பான நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறுதி ஒப்புதல் பெற்றவர்களை விடுதலை செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
செய்திகள் : கார்த்திக், கோவை