செய்திகள்

ரூ.1.10 கோடிக்கான முந்திரியை லாரியுடன் ஆட்டைய போட்ட முன்னாள் அமைச்சர் மகன் !!!

ரூ.1.10 கோடிக்கான முந்திரியை லாரியுடன் ஆட்டைய போட்ட முன்னாள் அமைச்சர் மகன் !!!

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்வதற்காக, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள தனியார் முந்திரி ஆலையில் இருந்து ரூ.1.10 கோடி மதிப்புள்ள 16 டன் எடை கொண்ட முந்திரியுடன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு லாரி சென்றது. இந்த லாரியை ஆலங்குளத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தெயவசெயல்புரம் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியை காட்டி டிரைவரை மிரட்டி லாரியை கடத்தினர். இது தொடர்பாக டிரைவர் ஹரி, முந்திரி ஆலை மேலாளர் ஹரிகரன் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து லாரி ஏஜென்சியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், ரூரல் ஏஎஸ்பி சந்தீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அனைத்துச் சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்தனர். மேலும், பின்னால் காரில் வந்த 7பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தூத்துக்குடி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சித செல்லப்பாண்டியன் மகன் ஜெயசிங் (45), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கணபதி மகன் மாரிமுத்து (30), முறப்பநாடு கணபதி கோவில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் செந்தில் முருகன் (33), முள்ளக்காடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் மனோகரன் (35), பிரையண்ட் நகர் 12வது தெருவைச் சேர்ந்த சக்தி மகன் விஷ்னு பிரசாத் (25), முறப்பநாட்டைச் சேர்ந்த முனியசாமி மகன் பாண்டி (20), நெல்லை சமாதான புரத்தைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (26) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டுள்ள ஜெபசிங், தூத்துக்குடி முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியனின் மகன் ஆவார். இந்த சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் : மாரிராஜ், தூத்துக்குடி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button