கோவையில் யானைகள் உயிரிழப்புகள் குறித்த விசாரணை அறிக்கை என்னவானது – பி.ஆர். நடராஜன் எம்.பி. கேள்வி..!
கோவை: கோவையில் யானைகள் உயிரிழப்புகள் குறித்த விசாரணை அறிக்கை என்னவானது என்று பி.ஆர். நடராஜன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை நவக்கரையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நவக்கரை பகுதியில் யானைகள் இருப்புபாதையை கடக்கையில் உயிர்ப்பலியாவது தொடர்ந்து வருகிறது.குறிப்பிட்ட இந்த இடத்தில் மட்டும் இது மூன்றாவது விபத்து என்பது கவலையளிக்கிறது.
இந்தப் பகுதியில் குறிப்பிட்ட தூரத்தை 30 கிலோ மீட்டருக்கு குறைவான வேகத்தில்தான் கடக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளது. ரயில்வே நிர்வாகம் இதனை கண்காணிக்கிறதா, இந்த நடைமுறைகளை மீறும்போது நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்கிற கேள்வி எழுகிறது.மேலும், இத்தனை வருடங்கள் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் சமீப காலங்களில் மட்டும் ஏன் இப்படி யானைகள் இருப்புப் பாதைகளை கடக்கிறது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
யானைகளின் வலசை பாதைகளை மறித்து கட்டிடங்கள், நிறுவனங்கள் கட்டப்பட்டது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். அப்படியான விதி மீறல்கள் மீது உடனடியாக பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுத்து விதிமீறல் கட்டிடங்களை அகற்ற வேண்டும்.
மேலும் கோவை மாவட்டத்தில் யானைகள் தொடர் உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டது.இந்த ஆய்வில் என்ன தெரியவந்தது. அந்த ஆய்வு அறிக்கையின் முடிவு என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இனி இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க ரயில்வே நிர்வாகமும், வனத் துறையும் இணைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் : கார்த்திக், கோவை