மனம் வருத்தப்படுத்திருந்தால் பொறுத்தருள்க!! அமைச்சர் கே.என்.நேரு…..
மதுரை எம்.பி. சு.வெங்கடேசனை ஒருமையில் பேசியதால் மனம் வருத்தப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க.. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன் என்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேருவிடம் மதுரை விமான நிலைய விரிவாக்கம் என்ன நிலையில் இருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு, சம்பந்தப்பட்டவர்களை விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள். மதுரையில் வெங்கடேசன் என்ற எம்.பி. ஒருவன் இருக்கிறான், அவனிடம் கேளுங்கள் என்றார்அமைச்சர் கே.என்.நேருவின் இந்த பதில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அமைச்சர் நேருவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது.
திமுகவின் கூட்டணி கட்சியான சிபிஎம் கட்சியின் லோக்சபா தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனை பொதுவெளியில் இப்படி ஒருமையில் திமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான கே.என்.நேரு பேசியதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது.
அரசியல் நாகரீகமற்றது
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமது ட்விட்டர் பக்கத்தில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், தோழர் சு.வெங்கடேசன் எம்.பி. குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது.
பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள் என தெரிவித்திருந்தார்.
கே.என்.நேரு விளக்கம்
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு தமது ட்விட்டர் பக்கத்தில், பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் ரியாக்சன்
ஆனாலும் மனம் வருத்தபடுத்தியிருந்தால் பொறுத்தருள்க என அமைச்சர் நேரு பதிவிட்டிருப்பதற்கும் அவரது ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் பெருந்தன்மையான பதிவு இது என பலரும் அவரை பாராட்டியுள்ளார். அத்துடன் மிகவும் பெருமைக்குரியது. முதல்வருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாமல் பார்த்து பேசவும் எனவும் அதில் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்.
— K.N.NEHRU (@KN_NEHRU) November 27, 2021
செய்திகள் : எம்.ஆர்.கிருஷ்ண பிரபு, மதுரை