இல்ல புரியல.,5ஜியே வரல அதுக்குள்ளையும் 6ஜியா?? எதற்கு இந்த அவசரம்??
வேகமான இணைய சேவை என்பது தற்போது அவசியமாகிவிட்டது. 5ஜி விரைவில் வெளியாகும் என்ற செய்தி மட்டும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனால் எப்போது என்ற பதில் தற்போதுவரை கிடைத்தப்பாடில்லை. இதற்கான காரணம் 5ஜி ஸ்பெக்ட்ரமிற்கான ஏலத் தாமதமே ஆகும்.
இதற்கிடையில் 6ஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து மத்திய அரசு சூசமாக தெரிவித்திருக்கிறது. அதாவது அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டில் 6ஜி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், ஆன்லைன் வெபினாரில் 6ஜி வெளியீடு குறித்து குறிப்பிட்டுள்ளார்.
6ஜி மேம்பாட்டிற்கு தேவையான அனுமதி
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தகவலின்படி, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 6ஜி நெட்வொர்க்குகள் இந்தியாவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. 6ஜி மேம்பாட்டிற்கு தேவையான அனுமதிகளை மத்திய அரசு முன்னதாகவே அறிவித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்.
இதையடுத்து 2023 அல்லது 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 6ஜி அறிமுகம் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஃபைனான்சியல் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த வெபினாரில் 6ஜி குறித்த அறிவிப்பை அமைச்சர் வெளிப்படுத்தினார். அதேபோல் 6ஜி நெட்வொர்க்குகளை இயக்க தேவையான டெலிகாம் மென்பொருள் நாட்டிலேயே உருவாக்கப்படும் எனவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்கள் உலக அளவில் சந்தைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
5ஜி இணைப்பின் வளர்ச்சி
மத்திய அமைச்சர் அறிவிப்பு உண்மையாகும் பட்சத்தில் இந்த இணைப்பு சேவையில் நாடு முன்னணியில் இருக்கும் என கூறப்படுகிறது. நாடு முழுவதும் 5ஜி இணைப்பின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கான உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்க இந்தியா திட்டமிட்டிருக்கிறது. 6ஜி குறித்த விவாதங்கள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் 5ஜி சேவை ஏலம் நடைபெறும் என நம்பப்படுகிறது.
முன்னோக்கி வரும் நெட்வொர்க்
5ஜி சேவை முழுமையடைய நாடு பல ஆண்டுகளாகவே காத்திருக்கிறது. இந்த சேவையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் தொடர்ந்து முன்னோக்கி செல்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் 5ஜி அலைவரிசை பேண்ட்கள் ஏலத்திற்கு வரும் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழு, ஏலம் மற்றும் 5ஜி சேவை தாமதம் குறித்து தொலைத்தொடர்பு அமைச்சகம் விளக்கம் கேட்டிருந்தது. இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்க போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என குழு ஏற்பாடு செய்திருந்தது.
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா (விஐ)
அதேபோல் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா (விஐ) உள்ளிட்ட மொத்தம் 13 நிறுவனங்களை 5ஜி சோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல் கமிட்டியின் அறிக்கையின்படி அடுத்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு வர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மறுபுறம் வெளியான தகவலின்படி 5ஜி சேவையை ஆகஸ்ட் 15 2022 சுதந்திர தினத்தன்று தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நடந்து வரும் 5G சோதனைகள்
இந்தியா இன்னும் 5ஜி சேவையின் ஆற்றலைப் பார்க்கவில்லை. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5G சோதனைகளை நடத்தி வருகின்றது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G சோதனையுடன் வெகுதூரம் வந்துவிட்டாலும், அவர்கள் அதை முடிக்கக்கூடிய கட்டத்தில் இன்னும் இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது. சமீபத்திய தகவலின் படி, முன்பு எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் இருந்து இதன் அறிமுகம் இன்னும் பின்னோக்கி சென்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
5G ஸ்பெக்ட்ரமிற்கான ஏலம்
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நவம்பர் 2021ஆண்டிற்குள் 5G சோதனைகளை முடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் பொருள் இந்தியாவில் 5G ஸ்பெக்ட்ரமிற்கான ஏலம் வரும் 2022 ஆண்டின் முதல் காலாண்டில் நடத்தப்படலாம் என்று யூகிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அவர்களின் 5G தொழில்நுட்பத்தைச் சோதிக்கக் கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. 5G சோதனைக்காகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு DoT மேலும் ஆறு மாதங்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
5G வெளியீட்டில் தாமதம்
நீட்டிக்கப்பட்ட சோதனைக் கட்டத்துடன், ஸ்பெக்ட்ரம் ஏலங்கள் இன்னும் பின் நோக்கித் தள்ளப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது, 5G வெளியீட்டில் தாமதம் ஏற்படும். 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவிற்கு 5G இன் சேவையை வழங்குவதே திட்டமாக இருந்தது. முன்னதாக அது சாத்தியமில்லை என்று தோன்றினாலும், அது நடக்காது என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் 5G சோதனைகளைக் குறைந்தபட்சம் 2022 முதல் காலாண்டில் தொடரும் என்பதால், ஸ்பெக்ட்ரம் ஏலத்தை முன்னோக்கித் தள்ள வேண்டும்.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இன்னும் 5G ஸ்பெக்ட்ரம் புதிய அடிப்படை விலை கொண்டு வரவில்லை. மற்றொரு சமீபத்திய டெலிகாம் அறிக்கையின்படி, பிப்ரவரி அல்லது மார்ச் 2022 ஆண்டின் இறுதிக்குள் 5G அலைக்கற்றைக்கான புதிய விலையை TRAI பரிந்துரைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், இயற்கையாகவே, ஸ்பெக்ட்ரம் ஏலம் அடுத்த மாதங்களில் மட்டுமே நடக்கும். 2023 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இது நடந்தால், 2022 இன் இரண்டாம் பாதியில் இந்தியா 5G சேவையைப் பார்க்கும் என்று கூறப்பட்டுள்ளது.
செய்திகள் : எம்.ஆர்.கிருஷ்ண பிரபு, மதுரை