*மதுரை மாவட்ட நிருபர்/எம்.ஆர்.கிருஷ்ண பிரபு*
அரசு ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு; கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தல்!
தமிழகத்தில் பருவமழை வெளுத்தும் வாங்கும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு திடீரென சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவுகளை அரசு ஊழியர்கள் கட்டாயம் பின்பற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் கடலோர பகுதி மீனவர்கள் இயல்பு வாழ்கை பாதிக்கபட்டுள்ளது.
குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு மாதமாக தொடரும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பே முழுவதும் சீரடையாத நிலையில் மீண்டும் கடந்த மூன்று நாட்களாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
அந்தவகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் கூடுதல் தலைமை செயலர் அதுல் மிஷ்ரா, மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும், வருவாய்த்துறை ஊழியர்கள் கிராமங்களில் தங்கி பணிபுரிய வேண்டும் என்றும் கூடுதல் தலைமை செயலர் அதுல் மிஷ்ரா அதிரடியாக உத்தரவிட்டார்.