
தமிழகத்தில் தொடர் மழை : இதுவரை 105 பேர் பலி மீட்புப் பணியில் 54 படகுகள்.
தமிழகத்தில் இதுவரை மழையில் சிக்கி 105 பேரும் 286 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீட்பு பணியில் 54 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மழை பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,வடகிழக்கு பருவமழை காரணமாக செங்கல்பட்டில் மயிலாடுதுறை திருவாரூர் ராமநாதபுரம் நாகப்பட்டினம் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருவதால் இயல்பான நிலையை விட 76 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டார்.
இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை மற்றும் மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறினார்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் இரண்டு குழுக்கள், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் தலா ஒரு குழுக்கள் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் 1700 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, ராணிப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 188 முகாம்கள் மூலம் 15016 நபர்கள் தங்க வைக்கப் பட்டதாகவும் , சென்னையில் 1048 நபர்கள் 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 98,350 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறினார்..
தொடர்ந்து பேசிய அவர், நேற்று மழை பாதிப்பால் 2 பேர் உயிரிழந்ததாகவும் , மொத்தம் 105 பேர் உயிரிழந்ததாகவும் 286 கால்நடைகள் 1,814 குடிசைகள் மற்றும் 310 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் , சென்னையில் 464 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், 86 இடங்களில் அகற்றப்பட்டு 378 இடங்களில் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது எனவும் மீட்பு பணியில் 54 படகுகள் உள்ளதாகவும் கூறினார்.
சென்னை போல் மற்ற இடங்களில் பெரிதாக எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்ற அமைச்சர், தாம்பரம் , முடிச்சூர் வரதராஜபுரம் போன்ற பகுதிகள் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் தண்ணீர் தேங்குகிறது. ஆயினும் அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் மழை இல்லாத நாட்களில் மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும் எனவும் கூறினார்.
செய்திகள் : எம்.ஆர்.கிருஷ்ணபிரபு, மதுரை