டிசம்பர் 1 முதல் இந்த மூன்று கட்டண உயர்வு அமல்!!
டிசம்பர் 1 முதல் இந்த மூன்று கட்டண உயர்வு மாற்றம் அமலுக்கு வரும் என அறிவிப்பு.
இந்தியாவில் கொரோனா சமயத்தில் பொருளாதார ரீதியில் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில் தற்போது அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் இந்த சமயத்தில் ஆண்டின் கடைசி மாதத்தில் விலைவாசி உயர்வை மக்கள் சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தீப்பெட்டி
அதன்படி அடுத்த மாதம் முதல் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட உள்ளது. அதன்படி, தீப்பெட்டியின் விலை தற்போதைய விலையான ரூ.1ல் இருந்து ரூ.2 ஆக உயர உள்ளது. இந்த விலை மாற்றம் 14 வருட இடைவெளிக்குப் பிறகு வருகிறது. தீப்பெட்டியின் விலை 100% உயர்த்தப்பட்டதன் பின்னணியில் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணம் என தொழில்துறை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஒரு பெட்டியில் குச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதன்படி இரண்டு ரூபாய் தீப்பெட்டியில் 36 குச்சிகளில் இருந்து 50 குச்சிகளாக இருக்கும்.
இந்த விலை உயர்வு குறித்து தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறுகையில் ஒரு கிலோ சிவப்பு பாஸ்பரஸ் ரூ.410-ல் இருந்து ரூ.850 ஆகவும், மெழுகு ரூ72-ல் இருந்து ரூ.85 ஆகவும், பொட்டாசியம் குளோரேட் ரூ.68-ல் இருந்து ரூ80 ஆகவும், குச்சிகள் ரூ.42-ல் இருந்து ரூ.48 ஆகவும், வெளி பெட்டி ரூ.42ல் இருந்து ரூ.55 ஆகவும், உள் பெட்டி ரூ.38-ல் இருந்து ரூ.48 ஆக உள்ளது. இதுபோல் அனைத்து மூலப்பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது என கூறியுள்ளார்.
SBI EMI
அதே போல ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதன் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் அனைத்து EMI பரிவர்த்தனைகளுக்கும் செயலாக்கக் கட்டணம் மற்றும் வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. சமீபத்திய நடவடிக்கையாக, எஸ்பிஐ கார்ட்ஸ் & பேமென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (SBICPSL) செயலாக்கக் கட்டணமாக ரூ.99 வசூலிப்பதாகவும், அதற்கு வரி விதிக்கப்படும் என்று இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது.
இந்த புதிய விதி டிசம்பர் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும். சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் செய்யப்படும் அனைத்து EMI பரிவர்த்தனைகளுக்கும் கடன் வழங்குபவர் இந்தச் செயலாக்கக் கட்டணத்தை வசூலிப்பார். Amazon, Flipkart மற்றும் Myntra போன்ற இ-காமர்ஸ் இணையதளங்களுக்கும் இது பொருந்தும். இது குறித்து எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டது.
ஜியோ கட்டண உயர்வு
பாரதி ஏர்டெல் ,வோடபோனை தொடர்ந்து ஜியோ-வும் தனது திட்டங்களின் கட்டணத்தொகை 20% அளவு உயர்த்தியுள்ளது. அதன்படி புதிய அன்லிமிடெட் திட்டங்கள் டிசம்பர் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் : எம்.ஆர்.கிருஷ்ணபிரபு, மதுரை