மாஜி அமைச்சர் மீது கேரளா பெண் பரபரப்பு புகார்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கேரளா பெண் பரபரப்பு புகார் – ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவேன் என ஆவேசம்.
14 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் நெல்லை சரக டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார். விஜயபாஸ்கரிடம் கொச்சியில் விசாரணை நடைபெறுகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஷர்மிளா என்ற பெண். இவர் இன்று நெல்லை காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்தார். எனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரால் தொடர்ந்து மிரட்டப்படுவதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். டிஜிபி யை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாகவும் இந்த சூழ்நிலையில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற காரணத்திற்காக நெல்லையில் டிஐஜியிடம் புகார் கொடுத்ததாக சர்மிளா தெரிவித்தார்.
மேலும் பல இடங்களில் நாங்களும் விஜயபாஸ்கர் குடும்பத்தினரும் ஒன்றாக பல இடங்களில் கூடியுள்ளோம். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. மேலும் அவர் என்னுடன் மொபைலில் தகவல் பரிமாற்றம் செய்த ஆவணங்களும் என்னிடம் உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தொழில் ரீதியாக எனக்கு ஏற்பட்ட பாதிப்பின் போது என்னுடைய நகைகளை பத்திரமாக வைப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரும் அவரது மனைவி ரம்யா விஜய பாஸ்கரும் சேர்ந்து என்னிடம் இருந்து 14 கோடி ரூபாய் வரையிலான பணம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டனர்.
இப்போது வரை அதைக் கேட்டால் திருப்பி தரவில்லை. ஆனாலும் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருந்ததால் கடந்த 2019 ம் ஆண்டு மூன்று கோடி ரூபாய் பணம் மட்டும் என்னிடம் கொடுத்து விட்டு என்னை மிரட்டி வீடியோவும் எடுத்துக் கொண்டனர். இந்த பணத்தையும் அவரது நெருங்கிய பழக்கமுள்ள மருத்துவர் மூலமாகத்தான் திருப்பித் தந்தனர். இன்னும் எனக்கு தரவேண்டிய பணத்தை நகையை திருப்பி தரவேண்டும் என்று கேட்டால் என் மீது பொய் வழக்குகள் போட்டு என்னை தமிழகத்திற்குள் வர விடாமல் செய்கின்றனர்.
இப்போதும் எனது வழக்கறிஞர்கள் திருநெல்வேலியில் இருப்பதால் அவர்களை சந்திக்க செங்கோட்டை வழியாக வந்தால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நெல்லை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன்.
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் என்னுடன் பேசிய ஆவணங்கள் அனைத்தையும் தமிழக டிஜிபியிடம் கொடுக்க உள்ளேன் என்றார். மேலும் தமிழக முதல்வரையும் சந்தித்து அவர் . குறித்த புகார் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, கேரள பெண் ஷர்மிளா, அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகின்றனர். இன்று கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்திகள் : எம்.ஆர்.கிருஷ்ண பிரபு, மதுரை.