6 திருமணங்கள் நடத்தி 40 பவுன் நகை கொள்ளை – மோசடி வாலிபர் உட்பட இரண்டு பெண்கள் கைது
பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் பாஸ்கர் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பெருமாள் புரத்தில் உள்ள கிறிஸ்தவ சபை ஆலயத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டு சார்பாக பாஸ்கருக்கு ரூபாய் 3 லட்சமும் 40 பவுன் நகைகளும் சீர் வரிசையாக கொடுக்கப்பட்டது.
இந்த சீர்வரிசைகளை வாங்கிக்கொண்ட வின்சன்ட் பாஸ்கர் மாயமானார். அவரது மனைவி அவரைத் தேடி அலைந்துள்ளார். அப்பொழுதுதான் அவருக்கு தெரியவந்தது, தனது கணவருக்கு ஏற்கனவே 5 முறை திருமணம் நடந்துள்ளது என்று. இதுகுறித்து அந்தப் பெண் பாளை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி, உதவி ஆய்வாளர் வள்ளி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின்போது வின்சன்ட் பாஸ்கர் தனது அம்மா, சித்தி என்று அழைத்து வந்தவர்கள் பணம் கொடுத்து நடிக்க வைக்கப்பட்டதாகவும், திருமணம் நடத்துவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
வின்சென்ட் பாஸ்கர் மற்றும் அவரது அம்மாவாக நடித்த சாத்தான்குளத்தில் உள்ள முதலூரைச் சேர்ந்த பிளாரென்ஸ் மற்றும் சித்தியாக நடித்த திசையன்விளையில் உள்ள சுவிசேஷ புரத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வி ஆகியோர் நேற்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
வின்சன்ட் பாஸ்கர் தான் ஹார்பரில் வேலை செய்வதாகக் கூறி பாளையங்கோட்டையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதற்கு சுவிசேஷ புரத்தைச் சேர்ந்த தரகர் இன்பராஜ் உதவி செய்ததாகவும் கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக மிக எளிமையான முறையில் திருமணத்தை நடத்தியுள்ளனர்.
இந்த திருமணத்திற்கு முன்பு வின்சென்ட் பாஸ்கர் மேலும் 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்தும் செய்துள்ளார். மேலும் இரண்டு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பியுள்ளனர். பாஸ்கர் இந்த பெண்ணை ஆறாவதாக திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.
பெண் வீட்டாரை நம்ப வைப்பதற்காக பிளாரன்ஸ் மற்றும் தாமரைச்செல்வி பணம் கொடுத்து தாய் மற்றும் சித்தியாக நடிக்கவைத்துள்ளனர். திருமணம் நடந்து முடிந்ததும் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர். இடைத்தரகர் இன்பராஜுக்கும் பணம் கொடுத்து திருமணத்திற்கு உதவும்படி பாஸ்கர் அவரையும் ஏற்பாடு செய்துள்ளார்.
இவ்வாறு மோசடி செய்த வின்சென்ட் பாஸ்கர் மற்றும் அம்மா சித்தியாக நடித்த இரண்டு பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர், இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.