மத்திய அரசின் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டிருக்கும் `விபத்து மற்றும் தற்கொலை மரணம்’ அறிக்கையில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தொழில்முனைவோர்கள் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளது.
அண்மையில் வெளியான இந்த அறிக்கையின்படி, 2019-ல் 9,052 தொழில்முனைவோர் தற்கொலை செய்த நிலையில், 2020-ல் தற்கொலை எண்ணிக்கை 11,716-ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது. இதில் வர்த்தகர்கள் (tradesmen) எண்ணிக்கை 4,356 எனவும், இது இதற்கு முந்தைய ஆண்டில் 2,906-ஆக இருந்தது எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
மீதம் இருப்பதில் 4,226 பேர் விற்பனையாளர்கள் (vendors) எனவும், 3,134 பேர் மற்ற துறை சார்ந்த தொழில்முனைவோர்கள் எனவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, கர்நாடகாவில் மட்டும் 1,772 தொழில்முனைவோர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இது 2019-ம் ஆண்டை விட 103% அதிகம். மகாராஷ்டிராவில் 1,610 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 1,447 தொழில்முனைவோர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இது 2019-ம் ஆண்டை விட 36% அதிகம்.
இந்திய மாநிலங்களிலேயே மகாராஷ்டிராவில்தான் பதிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம்.இ-க்கள் அதிகம் இருக்கிறார்கள். இங்கு மட்டும் 28.38 லட்சம் எம்.எஸ்.எம்.இ இருக்கிறது. இந்த மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 15.40 லட்சம் எம்.எஸ்.எம்.இ-க்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவின் பரவ ஆரம்பித்த கொரோனா நோய் தொற்று இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வாட்டி வதைத்திருப்பதுதான் அதிக அளவில் தொழில்முனைவோர்கள் தற்கொலை செய்யக் காரணம் என்று சொல்லப்படுகிறது. நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கினால் இந்தத் துறை சார்ந்த தொழில்முனைவோர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். அதற்கு முன்பாக மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பும் சிறுதொழில்முனைவோர்களை பெரிதும் சிரமத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. இதன் காரணமாகவும் அதிக அளவில் தொழில்முனைவோர்கள் தற்கொலை எண்ணத்துக்கு தள்ளப்படுகிறார்கள் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
தற்கொலை எண்ணம் எழுந்தால் தமிழக அரசின் 104 என்ற 24 மணி நேர சேவை எண்ணுக்கு அழைக்கலாம். இந்த இலவச தொலைபேசி சேவையில் உங்களின் மனநலக் குழப்பங்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.