செய்திகள்

அதிக பயணி : நகர முடியாத பேருந்து : நடுரோட்டில் பேருந்தை விட்டு சென்ற ஓட்டுனர் : பரபரப்பு

அதிக பயணி : நகர முடியாத பேருந்து : நடுரோட்டில் பேருந்தை விட்டு சென்ற ஓட்டுனர் : பரபரப்பு

மயிலாடுதுறையில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப்பேருந்து. பேருந்தை இயக்க முடியாததால் கோபமடைந்த ஓட்டுனர் சாலையில் நிறுத்தி விட்டுச் சென்றதால் பரபரப்பு.

மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி மயிலாடுதுறை நகருக்கு பேருந்து மூலம் வந்து செல்கின்றனர். இதில், சில உள்கிராமங்களுக்கு ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் தொங்கியபடியே பயணம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

இன்று மாலை மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு வழியாக பாப்பாகுடி சென்ற அரசுப் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது. இதனால் மாணவர்கள் படிகளில் தொங்கியபடியே பயணித்துள்ளனர். அவர்களை உள்ளே நிற்கச்சொல்லி ஓட்டுநர் பலமுறை சத்தமிட்டும், மாணவர்கள் தொங்கியபடியே சென்றுள்ளனர். இதனால் பேருந்தை இயக்கமுடியாமல் சிரமமடைந்த பேருந்தின் ஓட்டுநர், ஆத்திரமடைந்து அரசுப்பேருந்தினை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரை மணி நேரமாக சாலையிலேயே நின்றுகொண்டிருந்த பேருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ்சும் செல்லமுடியாமல் சிக்கிக்கொண்டது. பின்னர் வெகுநேரம் கழித்து அங்கு வந்த ஓட்டுனர் பேருந்திணை எடுத்து சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் பேருந்தினை இயக்கும்படி கூறியதன் பேரில் ஓட்டுனர் பேருந்தினை இயக்கி சென்றார். அதிக அளவு பயணிகளை ஏற்றியதால் கோபமடைந்து ஓட்டுனர் சாலையிலேயே பேருந்தை நிறுத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மணல்மேடு உள்ளிட்ட மார்க்கத்தில் பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும் காலை, மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

செய்திகள் : ச.ராஜேஷ், மயிலாடுதுறை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button