விரைவில் தலை நிமிர்வோம் சசிகலா உறுதி
தொண்டர்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் விரைவில் தலை நிமிர்வோம், நமது நிலை மாறும் என்று சசிகலா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக சசிகலாவின் வசம் வந்தது. ஆயினும், அப்போது முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு சசிகலா எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பணி அமர்த்திவிட்டு சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக சிறை செல்ல நேர்ந்தது.
சிறையிலிருந்து தண்டனை காலம் முடிந்த பிறகு வந்து பார்த்தால் அதிமுக கட்சியே தலைகீழாக மாறிப் போயுள்ளது. பிறகு டி.டி.வி.தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று தனிக் கட்சியை தொடங்கினார். ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஒன்றாக இணைந்து அதிமுகவை வழி நடத்தினர். நடந்த தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவைப்படுவதாக ஒரு கருத்து முன்மொழியப்பட்டது.
அதன்பிறகே சசிகலா அதிமுகவை வழிநடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அதை ஏற்க மறுக்கின்றனர். அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை வழி நடத்துமாறு கூறினார். ஆனால் சசிகலா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
சசிகலாவிற்கு ஆதரவாக உள்ள கட்சி நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதற்காகவும், சசிகலாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பியதற்காகவும் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
சசிகலாவிற்கு ஆதரவாக உள்ள கட்சி நிர்வாகிகளை இவ்வாறு கட்சியை விட்டு விலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதாவின் நினைவு நாள் அன்று அவரின் சமாதியில் சசிகலா அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளார். கட்சி தொண்டர்களும் இதில் கலந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தொண்டர்கள் எதற்காகவும் கலங்க வேண்டாம், நாம் தலைநிமிர்ந்து நிற்கும் நேரம் வரும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். தொண்டர்களின் கடின உழைப்பாலும் ஆதரவாலும் உயர்ந்த அதிமுக இப்பொழுது தனிமனித ஈடுபாடு காரணமாக அதன் நிலையை இழந்துள்ளது. அதிமுகவை மீண்டும் நிலைநிறுத்த கடமை பட்டுள்ளதாகவும் சசிகலா கூறியுள்ளார். அதற்காக தொண்டர்களும் தனது பணியைத் தொடர்ந்து செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தனது கடைசி மூச்சு உள்ளவரை கட்சிக்காக பாடுபடுவேன் என்றும் சசிகலா கூறியுள்ளார்.