இலங்கை சிறையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மீனவர்கள் : கண்ணீர் மல்க வரவேற்பு
கொரோனா காரணமாக இலங்கை சிறையில் இருந்த 5 மீனவர்கள் விடுதலை ; சொந்த ஊருக்கு திரும்பிய மீனவர்களை கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்
கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இலங்கை அரசால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களின் 18 மீனவர்கள் கடந்த 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊர் வந்தடைந்தனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக இலங்கையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகை தந்த மீனவர்கள் இன்று சொந்த ஊரான அக்கரைப்பேட்டை கிராமத்திற்கு வந்தடைந்தனர். நாகை மீன்பிடி துறைமுகம் வருகை தந்த மீனவர்களை உறவினர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் சால்வை அணிவித்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்ய உதவிய ஒன்றிய அரசிற்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ள விடுதலையான மீனவர்கள், இலங்கையில் சிக்கியுள்ள விசைப்படகுகளை விரைந்து மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்திகள் : ச.ராஜேஷ், நாகை