ஏ.டி.எம்-ல் பணம் எடுத்து தருவதாக நூதன மோசடி
சரண் ராஜ் உடற்கல்வி ஆசிரியருக்கு படித்துவிட்டு கோ-கோ மற்றும் கபடி ஆகிய விளையாட்டிற்கு நடுவராக இருந்து வந்துள்ளார். விழுப்புரம் பகுதியில் இவர் தொடர்ந்து ஏ.டி.எம்-ல் பணம் எடுத்து தருவதாக நூதன மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவலம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். தனது வேலையை முடித்துவிட்டு ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்துள்ளார். அவ்வாறு முயற்சிக்கும்போது பணம் எடுக்க முடியாததால் அருகில் இருந்தவர்களிடம் கேட்டுள்ளார். அவ்வாறு கேட்கும் போது அருகில் உள்ளவர்கள் அவருடைய ஏடிஎம் கார்டு காலாவதி ஆகிவிட்டது என்றும் புதிதாக ஒரு ஏடிஎம் கார்டு வாங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அதன் பிறகு வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள வங்கியில் புதிதாக ஏ.டி.எம் கார்டு வாங்கியுள்ளார். புதிய ஏ.டி.எம் கார்டை செயல்படுத்துவதற்கு ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்ததால் திணறிப் போய் உள்ளார். பிறகு அங்கிருந்த செங்கம் தாலுக்காவின் புதிய குயிலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கர்ணன் என்பவரது மகன் சரண் ராஜ் தானாக முன்வந்து ஏழுமலைக்கு உதவி செய்வதுபோல் அவருடைய கைபேசிக்கு வரும் ஓ.டி.பி எண்ணை பதிவு செய்துள்ளார்.
ஏழுமலை ஏ.டி.எம் கார்டை சரண்ராஜ் வைத்துக் கொண்டு தன்னிடம் உள்ள வேறொரு ஏ.டி.எம் கார்டை ஏழுமலையிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இந்த சூழ்நிலையில் ஏழுமலையின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி 18 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். ஏழுமலையின் கைப்பேசிக்கு 18 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக வந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ந்துபோன ஏழுமலை காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு புகார் அளிக்கப்பட்ட நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் பிற காவல்துறையினர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்தனர். சரண்ராஜ் ஏழுமலையிடம் ஏடிஎம் கார்டை கொடுத்தது தெரியவந்தது.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சரண் ராஜ் என்பவர் உடற்கல்வி ஆசிரியருக்கு படித்துவிட்டு கோகோ கபடி போன்ற விளையாட்டுகளுக்கு நடுவராகவும் இருந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் இதுபோல நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது சரண் ராஜ் இடமிருந்து 18 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.