இப்பவே கண்ண கட்டுதே… கோவில் உண்டியலை உடைக்க முயன்று கிறங்கி போன திருடன்!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை என்னும் ஊராட்சியில் நாடியம்மன் எனும் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பழமையானது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் இத்திருக்கோவிலில் சிறப்பாக திருவிழா நடைபெறும்.
இந்த கோவில் பலருக்கும் குல தெய்வமாக உள்ளதால் ஏராளமானோர் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து தரிசனம் செய்வார்கள். இதனால் இந்த கோவில் அப்பகுதியிலேயே மிகவும் பிரபலமான கோயிலாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு திருவிழாவிற்கு மட்டுமின்றி தினமும் ஏராளமான மக்கள் சென்று வருவதால் அந்த கோவிலில் வருமானத்திற்கு குறைவு என்றே கிடையாது.
அதனால் உண்டியலில் அதிகமான காணிக்கை செலுத்தப்படுகிறது. பலமுறை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போயுள்ளது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் சரியாக எடுக்கவில்லை, திருடர்கள் குறித்து தகவல் தெரிந்தால் விசாரணை செய்கிறோம் என்கின்றனர், காவல்துறையினர்.
கடந்த மாதம் 9 ஆம் தேதி அன்று முகமூடி அணிந்த திருடன் ஒருவன் இந்த கோவிலின் உண்டியலை உடைக்க முயற்சி செய்துள்ளான். பல மணி நேரம் பலவிதமாக முயற்சி செய்தும் அந்த பூட்டை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளான். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.
இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளூர் மக்கள் கூறியதாவது: இந்த கோவிலுக்கு சொந்தமானவர்கள் வெளிநாடுகள் வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்கள் என பல இடங்களில் வசித்து வருகின்றனர் இந்த கோவிலில் விலை மதிப்பற்ற பொருள்களும் உள்ளன. எனவே இந்த கோவிலை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.