லீவு விட்டது ஓகே பட் உங்க டைமிங் சரியில்லையே!!
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு : தாமதமான அறிவிப்பால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் பெற்றோர்கள் மழையில் நனைந்து தவிப்பு.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இது இன்று காலை ஆந்திரா தெற்கு ஒடிசா கடலோர பகுதியை நெருங்க கூடும் என்றும் அதனைத் தொடர்ந்து வட கிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அதே நேரத்தில் தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் இன்று பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக நல்ல வெயில் அடித்து வந்த நிலையில இன்று தீடிரென்று பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதலே தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் இடைவிடாது பரவலாக கனமழை பெய்து வருவதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி குடியிருப்புகளை ஏற்கனவே சூழ்ந்துள்ள நிலையில் அதன் நீர் மட்டம் மீண்டும் உயர்ந்துள்ளது.
ஏற்கனவே மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் கனமழை காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ஏதும் வெளியாகாகததால் மாணவ,மாணவிகள் வழக்கம் போல பள்ளிக்கு சென்றனர் . இந்நிலையில் இன்று காலை 8.40 மணியளவில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த
தாமதமான இந்த அறிவிப்பினால் ஏற்கனவே பள்ளிகளுக்கு சென்ற மாணவ,மணவிகள் பலர் மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு திரும்பினர். பலர் வீடுகளுக்கு திரும்ப முடியாமலும், மாணவர்களை எப்படி வீட்டிற்கு அழைத்து வருவது என பெற்றோர்களும் மிகவும் கவலை அடைந்தனர்.
செய்திகள் : மாரிராஜ், தூத்துக்குடி